இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணையும் புதிய திரைப்படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்ற தற்காலிக பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளது.
ஆழமான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் OTT உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கும் முன்பாகவே முன்னணி OTT தளமான Netflix கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘தக் லைஃப்’ போன்ற முந்தைய படங்களின் OTT வியாபாரத்துடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை சற்று குறைவாக இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இவ்வளவு பெரிய டிஜிட்டல் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கனவே ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, தற்போது மீண்டும் அவருடன் இணைகிறார். அதேசமயம், சாய் பல்லவி முதல் முறையாக மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் கைகோர்ப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

