Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகள் திருமண புகைப்படத்துக்கு எதிர்ப்பு… நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!

Khushbu Sundar hits back at criticism over wedding posts amid K Bhagyaraj demise

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இயக்குநர் கே.பாக்யராஜும் தனது மனைவி பூர்ணிமாவுடன் திருமணத்தில் பங்கேற்றிருந்தார்.

திருமண விழாவுக்குப் பிறகு சென்னை திரும்பிய கே.பாக்யராஜ், நேற்று காலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மகளின் திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன் ஒருவர், “மாநிலமே கே.பாக்யராஜின் மறைவால் துக்கத்தில் இருக்கும் நேரத்தில் இந்த பதிவு தேவையா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு குஷ்பு கடுமையாக பதிலளித்து, “அப்படி என்றால் ஏன் என்னைப் பின்தொடர்கிறீர்கள்? விமர்சிப்பதற்காக மட்டுமா? என் மகளின் திருமணம் 46 மணி நேரத்திற்கு முன்தான் நடந்தது. மேலும், பூர்ணிமாவை யாருக்கு அதிகம் தெரியும்? உங்களுக்கா, எனக்கா? என் பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் தயவுசெய்து என்னைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள்,” என்று பதிலடி கொடுத்தார்.

குஷ்புவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.