“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே 22 முதல் OTT தளத்தில் வெளியாகிறது.
இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடித்துள்ளார். இயக்குநராக தனித்துவமான கதைகளால் கவனம் பெற்ற அவர், இந்த தொடரின் மூலம் கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திக்கிறார்.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடரை புதுமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் C.S. இசையமைத்துள்ள இந்த தொடரில், ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்விலும் பிரசாந்த் பாண்டியராஜ் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மேலும் பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ் மற்றும் சாயா தேவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“வாரண்ட்” தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் மறைக்கப்பட்ட உலகத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. சாதாரணமாக தோன்றும் விசாரணைகள் எவ்வாறு ஆபத்தான திருப்பங்களை எடுக்கின்றன என்பதையும், அதிகாரத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளையும் இந்த தொடர் வெளிக்கொணர்கிறது.
கோட்டை கருப்புசாமி என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்ட இந்த கதையில், அவரது பயம், அவமானம் மற்றும் அதிகாரத்தின் அழுத்தங்கள் எவ்வாறு அவரது செயல்களை மாற்றுகின்றன என்பதைக் காட்டுகிறது. அதேசமயம் அதிகாரம், ஆட்சி மற்றும் நீதிக்கிடையிலான மங்கலான கோட்டையும் கேள்விக்குறியாக்குகிறது.
பரபரப்பான போலீஸ் டிராமாவாக உருவாகியுள்ள “வாரண்ட்” தொடர், வரும் மே 22 முதல் ZEE5 OTT தளத்தில் வெளியாகிறது.

