நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குள் நடைபெறும் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் சூரி ‘முத்துக்காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி ‘மண்டாடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, நடிகர் சூரியின் திரைப்பயணம் குறித்து பெருமையாகப் பேசினார்.
அவர் கூறுகையில், “சூரி சார் ‘சங்கமம்’ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருந்தார். அந்தப் படம் 1999-ஆம் ஆண்டு வெளியானது. அன்று தொடங்கி தற்போது சூரி ஹீரோவாக 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர் போராடினார், போராடினார், போராடினார். ஆனால், தனது இடத்தை ஒருபோதும் கைவிடவில்லை. எதையும் கைவிடாமல் இருந்தால், ஒருநாள் சாதிக்கலாம் என்பதற்கு சூரி மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” என்று தெரிவித்தார்.
காற்று, அலை, கடல் நீரோட்டம் உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கணித்து, மீன்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின் போக்கை அறிந்து, மீன்பிடிக்கச் செல்லும் படகை வழிநடத்தும் அனுபவம் வாய்ந்த தலைவரையே ‘மண்டாடி’ என்று அழைப்பார்கள். இப்படத்தில் சூரி தலைமை கதாபாத்திரத்தில் நடிப்பதால், படத்திற்கு ‘மண்டாடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
படம் அறிவிக்கப்பட்டது முதலே ‘மண்டாடி’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 10-ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

