Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் ‘கற்றது தமிழ்’ கூட்டணி?

Will the ‘Kattradhu Thamizh’ Duo Reunite on Screen

இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக் படமாக திகழ்கிறது. ஜீவா மற்றும் அஞ்சலி இணைந்து நடித்த இந்த படம், இருவரின் திரைப்பயணத்திலும் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. குறிப்பாக, அஞ்சலியின் அறிமுகப் படமும் இதுவே.

இந்நிலையில், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா மற்றும் அஞ்சலி மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத்தலைவன்’, ‘ஜெயில்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள வசந்தபாலன், இந்த புதிய படத்திற்காக ஜீவா–அஞ்சலி கூட்டணியை மீண்டும் திரையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தை கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ படத்தில் அஞ்சலி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.