Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகுமா?

Will Dhruva Natchathiram Be Delayed Again

‘சீயான்’ விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் புதிய சட்டச் சிக்கலை சந்தித்துள்ளது.

முன்னதாக, படத்தின் நிதி பிரச்சினைகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், பட வருவாயை நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள சிறப்பு வங்கிக் கணக்கு மூலம் கடனாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜூன் 15, 2026-க்குள் படத்தை வெளியிட அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, மேலும் 30 நாட்கள் அவகாசம் கோரி கௌதம் மேனன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், படத்தின் வெளியீட்டை ஜூலை 15, 2026 வரை நீட்டிக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்னிலையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையில், படத்தை வெளியிட அனுமதித்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து முதலீட்டாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பும் அதே நாளில் வெளியாக உள்ளது. இதனால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்பை-த்ரில்லர் திரைப்படம், நிதி மற்றும் சட்டப் பிரச்சினைகளால் கடந்த 9 ஆண்டுகளாக முடங்கியுள்ள நிலையில், இந்த ஜூலை மாதமாவது திரைக்கு வருமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே தெரியவரும். விக்ரம் மற்றும் கௌதம் மேனன் ரசிகர்கள் அந்த தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.