Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

100 கிலோ எடையால் அவதி… மனம் திறந்த விஸ்மயா மோகன்லால்!

Vismaya Mohanlal Opens Up About Her 100 kg Weight Struggle

நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, “ஒரு கட்டத்தில் என் உடல் எடை சுமார் 100 கிலோவாக இருந்தது. அப்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்குக் கூட மிகவும் சிரமமாக இருந்தது. சில படிகள் ஏறினாலே மூச்சுத்திணறல் ஏற்படும். என்னைப் பார்த்தவர்கள், ‘ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறாய்?’ என்று கேட்பார்கள். ஆனால், நான் எதிர்கொண்ட சிரமம் எனக்குத்தான் தெரியும்” என்றார்.

இதையடுத்து, தாய்லாந்துக்கு சென்ற விஸ்மயா, அங்குள்ள ‘பிட்கோ’ மையத்தில் ‘முவே தாய்’ (Muay Thai) தற்காப்புக் கலையை பயிற்சி செய்யத் தொடங்கியதாக தெரிவித்தார். ஆரம்பத்தில் அந்தப் பயிற்சி மிகவும் கடினமாக இருந்தாலும், நாளடைவில் அதை முழுமையாக ரசிக்கத் தொடங்கியதாக கூறினார்.

மேலும், “என் பயிற்சியாளர் 10 கிக்குகள் செய்யச் சொன்னால், ஒன்பதாவது கிக்கிலேயே நான் சோர்ந்து விடுவேன். ஆனால் அவர் என்னை ஊக்குவித்து இன்னும் ஒரு கிக் செய்ய வைப்பார். அதன்பிறகு படிப்படியாக 30 கிக்குகள் வரை செய்யும் அளவுக்கு முன்னேறினேன்” என்று தனது பயிற்சி அனுபவத்தை பகிர்ந்தார்.

அதேபோல், “என் நோக்கம் உடல் எடையைக் குறைப்பது மட்டும் அல்ல. புதிய அனுபவங்களைப் பெற வேண்டும், பயணம் செய்ய வேண்டும் என்பதுதான். தாய்லாந்து வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்தது. அங்கு நான் உண்மையான சுதந்திரத்தை உணர்ந்தேன். கொரோனா காலத்திலும் அங்கேயே தங்கி தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டது, என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது” என்றும் விஸ்மயா மோகன்லால் தெரிவித்துள்ளார்.

விஸ்மயாவின் இந்த நேர்மையான அனுபவப் பகிர்வு தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.