வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் வழங்கும் புதிய ஆன்மீகத் திரைப்படம் ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ (World Of Mahasakthi). இப்படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வழக்கமான பக்தித் திரைப்படங்களின் பாணியிலிருந்து மாறுபட்டு, நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் முதன்மை அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். அவருடன் துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம், அபினயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
வணிக ரீதியான திரைப்படங்கள் மற்றும் பக்தித் திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தை இயக்குகிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில், குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
இப்படத்திற்கு வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். கோபிநாத் வேணுகோபால் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ராஜசேகர் கே சண்டைப் பயிற்சி இயக்குநராகவும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராகவும், பி.ஆர். வெங்கடேஷ் விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
ஆன்மீகக் கதைக்களத்துடன் நவீன தொழில்நுட்பம், பிரம்மாண்டமான காட்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ திரைப்படம், நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

