தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக, எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் கமல்ஹாசனை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் ஏராளமான சிறந்த எழுத்தாளர்கள் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த முன்னோடியான எழுத்தாளராக கமல்ஹாசன் திகழ்கிறார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை நேரில் சந்தித்து, அவரது அனுபவங்களையும் வழிகாட்டுதலையும் கேட்டறிய நேரம் ஒதுக்குமாறு கேட்டிருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு கமல்ஹாசன் சங்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது சினிமா மற்றும் எழுத்து தொடர்பான பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’, ‘ஹே ராம்’, ‘குணா’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட கமல்ஹாசன் உருவாக்கிய படங்களில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் மிகவும் வலிமையாகவும் கூர்மையாகவும் இருந்ததாகவும், சிறிய வசனங்கள்கூட ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கமல்ஹாசனை சந்தித்தது தங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்ததாக தெரிவித்துள்ள சங்கத்தினர், தங்களுக்காக நேரம் ஒதுக்கி சந்தித்ததுடன், வாழ்த்துகளைத் தெரிவித்த கமல்ஹாசன், சங்கத்தை சிறப்பாக நடத்துமாறும் அறிவுறுத்தியதாக கூறியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு தங்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

