நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிடும் முக்கிய வழக்கறிஞர் வேடத்தில் இயக்குநர் மிஷ்கின் நடித்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
மேலும் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் உயர்த்தியது.
இந்த நிலையில், புதிய ரிலீஸ் போஸ்டருடன் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணியின் காரணமாக ரசிகர்களிடையே ஏற்கனவே கவனம் பெற்றுள்ளது.


