நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் அம்மன் சன்னதி முன்பு மனமுருக வழிபட்ட அவர், கொடிமரத்தை தொட்டு வணங்கி, கோவிலை சுற்றி வலம் வந்து பிரகார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை செய்தார். அவரைக் கண்ட பக்தர்கள் பலரும் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “‘கருப்பு’ படத்தின் முதல் பூஜை மாசாணியம்மன் கோவிலில்தான் நடைபெற்றது. இந்த படத்தின் கதைக்களமும் மாசாணியம்மனை மையமாகக் கொண்டதே. படத்தைத் தொடங்குவதற்கு முன்பே அம்மனிடம் அனுமதி கேட்டோம். இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால் நன்றிக்கடன் செலுத்தவே இங்கு வந்துள்ளோம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நூறு மடங்கு அதிகமான வரவேற்பை மக்கள் அளித்துள்ளனர். குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்து ‘கருப்பு’ படத்தை ரசித்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.
அத்துடன், “முதலமைச்சர் விஜய் பதவியேற்ற நான்காவது நாளிலேயே ‘கருப்பு’ படம் வெளியானது. பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது திரைத்துறைக்கு மட்டுமல்ல, அனைத்து துறைகளுக்கும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றும் கூறினார்.
படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர், நடிகர் சூர்யா மற்றும் முழு படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜி, படக்குழுவினரின் உழைப்பை பாராட்டும் விதமாக நடிகர் சூர்யா கார்கள் வழங்கியிருப்பதையும் குறிப்பிட்டார்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு, ஆர்.ஜே. பாலாஜி தனது குடும்பத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

