இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்து, ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற பெருமையை ‘ராமாயணா’ பெற்றுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யஷ் மற்றும் அனுமனாக சன்னி தியோல் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் 2026 தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்பட்ட 4.09 நிமிட டிரெய்லர், வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. ராவணனின் மிரட்டலான அறிமுகம், ராமரின் சிறுவயது, சீதையுடன் திருமணம், 14 ஆண்டுகள் வனவாசம், சீதை கடத்தப்படும் காட்சிகள் உள்ளிட்ட முக்கிய தருணங்கள் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக, உலகத் தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ், ஏ.ஆர். ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் இசை மற்றும் பிரம்மாண்டமான திரைக்காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இதன் காரணமாக டிரெய்லர் அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி, மொத்தமாக 100 கோடி பார்வைகளை எட்டியுள்ளது.
மேலும், ஹிந்தி பதிப்பின் டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற புதிய சாதனையை ‘ராமாயணா’ படைத்துள்ளது. தீபாவளி வெளியீட்டை முன்னிட்டு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

