நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்தின் சுயசரிதை குறித்தும் இருவரும் உரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், ரஜினிகாந்தைச் சந்தித்து நீண்ட நாட்களானதால் அவரைப் பார்க்க வந்ததாகவும், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது கலை மற்றும் வாழ்வியல் குறித்துப் பேசியதாகவும், ஒரு வார்த்தைகூட அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ரஜினிகாந்தின் சுயசரிதை எப்போது வெளியாகும் எனக் கேட்டபோது, அதன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்ததாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஜினிகாந்தின் சுயசரிதை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் முதலில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் வாழ்க்கையில் வரலாறு மட்டுமின்றி வசீகரமும் இருப்பதால், அவரது சுயசரிதை அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களை
எப்போது சந்தித்தாலும்
இன்னிசை பாடும் இதயம்எதிராளிக்கு
இன்பம் கடத்தும்
மின்சார மனிதர் அவர்“பார்த்து நாளாயிற்று;
பார்க்க வந்தேன்;
ஜெயிலர் 2 வெற்றிபெற
வாழ்த்துகிறேன்” என்றேன்கலை பேசினோம்;
வாழ்வியல் பேசினோம்;
ஒரு வார்த்தைகூட
அரசியல் பேசவில்லை“எப்போது வெளிவரும்
சுயசரிதை” என்றேன்“வேலை நடக்கிறது;
விரைவில் வெளிவரும்” என்றார்“உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது” என்றேன்
“ஏன்?” என்றார்
“பலபேருக்கு
வரலாறு இருக்கிறது;
உங்களுக்கு வசீகரமும்
இருக்கிறது” என்றேன்நான் சொன்னதை
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்துக்கொண்டார்“முதலில்
தமிழ் ஆங்கிலம்
இரண்டிலும் வெளிவரலாம்” என்றார்“வந்தால்
அதிகம் விற்பனையாகும்
புத்தகங்களுள் ஒன்றாய்
விளங்கும்” என்றேன்பசுந்தேநீர்
பருகக் கொடுத்தார்அதிலிருந்த துளசிமணம்
வீடு வரும்வரை
வீசியது நாசியில்@rajinikanth
— வைரமுத்து (@Vairamuthu) October 12, 2026

