இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. குஷ்பு மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் பணியாற்றிய இயக்குநர், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகும் மனதிற்கு நெருக்கமான இடத்தைப் பிடித்திருக்கும். அப்படியான ஒரு திரைப்படம்தான் எனக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’.
எனது இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கு, உங்களின் தொலைநோக்குப் பார்வை, கனிவு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கும் நன்றி. இந்தப் படத்திற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் அவர்களுக்கு, இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி. ஒரு கதையை முழு மனதுடன் நம்பும் தயாரிப்பாளர் கிடைப்பது, பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
ரெஜினா, இந்தப் பயணத்தை உன்னுடன் பகிர்ந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. உனது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். குஷ்பு மற்றும் சினேகாவுடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றியதை எப்போதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் எனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நாங்கள் இணைந்து உருவாக்கிய இந்த உலகத்தை ரசிகர்கள் திரையில் காணும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த உருக்கமான பதிவு, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

