இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் படக்குழுவை மனதாரப் பாராட்டியுள்ளார்.
விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், ஆசைகள், கனவுகள், வலிகள் மற்றும் நம்பிக்கைகளை திரையில் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில், “இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம்தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படிப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்பட வேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ, அப்படிப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாகப் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படத்திற்கு பெரும் தூணாக நின்று இசையமைத்த இளையராஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் அன்பையும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமான ‘டோரதி’, மதுரை கிராமப்புறப் பின்னணியில் உருவாகியுள்ளது. ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், ஆண்மை, நட்பு, பாலின அடையாளம், வன்முறை, சமூக ஏற்பு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து பேசுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’, சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும், கார்த்திக் சுப்புராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
மாரி செல்வராஜுக்கு முன்பாக நடிகர் சூர்யாவும் ‘டோரதி’ படக்குழுவைப் பாராட்டியிருந்தார். தொடர்ந்து மம்மூட்டி, மணிரத்னம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்களும் படத்தைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்… @ilaiyaraaja @karthiksubbaraj
— Mari Selvaraj (@mari_selvaraj) October 7, 2026

