தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, இருவரின் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.
ராமராஜன் கடைசியாக கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான ‘சாமானியன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை காசிமாயன் எழுதியுள்ளதுடன், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் உருவாகும் 25-வது படமாக ‘கடவுள் தந்த பரிசு’ அமைகிறது.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர்கள் செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோரும் ராமராஜனுடன் இணைந்துள்ளனர். இப்படத்தில் இருவரும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இளையராஜா – ராமராஜன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கான பாடல் பதிவு பணிகளுடன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

