Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“விஜயை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தேன்…” – அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்த பேட்டி

I Avoided Meeting Vijay in Person... Archana Kalpathi Opens Up in Candid Interview

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “தளபதி விஜய் முதலமைச்சராக உயர்ந்திருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு ரசிகையாகவும், தயாரிப்பாளராகவும் அவர் சினிமாவில் இல்லாததை நான் நிச்சயம் உணர்வேன். அவரது படங்களைப் பார்த்தே நான் தீவிர ரசிகையாக மாறினேன்” என்றார்.

மேலும், “உங்களுக்குப் பிடித்தமான நாயகர்களை நேரில் சந்திக்காதீர்கள் என்றொரு பழமொழி உண்டு. அதனால் விஜய் சார் என் தந்தையின் அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம் நான் அங்கிருந்து விலகிச் செல்வேன். ஆனால் ‘பிகில்’ படத்தின் மூலம் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. என் ஹீரோவை நேரில் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது. அவர் எங்களை ஒருபோதும் ஏமாற்றவில்லை” எனக் கூறினார்.

‘சிங்கப்பெண்ணே’ என்ற வாசகமும், GOAT படத்தின் கார் எண் பலகையும் நல்ல நோக்கத்தோடு உருவாக்கப்பட்டவை என்றும், “நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவை பயன்படுத்தப்பட்டன. நல்ல நோக்கங்கள் எப்போதும் நல்ல பலன்களையே தரும்” என்றும் தெரிவித்தார்.

விஜய், நடிகர் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி ஒப்படைத்த நிகழ்வு குறித்து பேசுகையில், “யாரும் யாருக்குமே மாற்றாக வர முடியாது. தமிழ் சினிமாவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி இடம் உள்ளது. தற்போது திரையுலகம் ஒரு முக்கியமான மாற்றக் கட்டத்தில் உள்ளது. சந்தை நிலைமைகள் மாறியுள்ளன. பல சவால்கள் இருக்கின்றன. அதே சமயம், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து கடினமாக உழைக்கும் படைப்பாளிகளுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகவும் இருக்கிறது. அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தரமான படைப்புகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்” என்றார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தாமதம் குறித்து அவர் கூறுகையில், “தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனால் வெளியீடு தாமதமாகும்போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு வட்டிச் சுமை அதிகரிக்கும். விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து படம் வெளியாகும் என்று நம்புகிறேன். ரசிகர்கள் அனைவரும் முதல் நாள் முதல் காட்சிக்காக காத்திருக்கிறார்கள். படம் எப்போது வெளியானாலும் அது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்” என்றார்.

மேலும், “GOAT திரைப்படம் சமீபத்தில்தான் வெளியானதால் அதை மீண்டும் வெளியிடும் திட்டம் தற்போது இல்லை. ஆனால் எதிர்காலத்தில் ‘பிகில்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சி மேற்கொள்வோம். எங்கள் நிறுவனத்தின் அதிக வசூல் செய்த திரைப்படம் GOAT. அதற்கு அடுத்த இடத்தில் ‘பிகில்’ உள்ளது” என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.