நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ திரைப்படம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பு உபகரணங்களுக்கான வாடகைத் தொகையை செலுத்தாததுடன், பணம் கேட்ட நிறுவன மேலாளரை மிரட்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரின்படி, ‘தாஹிர் சினி டெக்’ நிறுவனத்திடம் இருந்து டிஜிட்டல் கேமராக்கள், லைட்டிங் உபகரணங்கள் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பு சாதனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக அந்த உபகரணங்கள் ஹைதராபாத்திலிருந்து கேரளாவுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் ரூ.2.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், படம் வெளியாகியும் இதுவரை சுமார் ரூ.1.80 கோடி வரை நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை என்று நிறுவனம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
மேலும், படம் வெளியாவதற்கு முன் நிலுவைத் தொகையை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் கடிதம், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பலமுறை தொடர்புகொண்டாலும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, பணம் கேட்டு சென்ற நிறுவன மேலாளர் ஜாவேத் அலியை தயாரிப்புக் குழுவினர் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதி கிஷோர் ஆகியோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

