தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், “விஜய் எனது நல்ல நண்பர். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமையட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் சிரஞ்சீவி, “முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் அவரது வெற்றிகள் தொடரட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மகேஷ்பாபு தனது வாழ்த்து செய்தியில், “எனது நெருக்கமான நண்பர் விஜய். எனது படங்களின் ரீமேக்குகளில் கூட என்னைவிட சிறப்பாக நடித்தவர். சினிமாவில் சாதித்தது போல அரசியலிலும் ஜொலித்து வருகிறார். அவரின் அரசியல் பயணமும் வெற்றிகரமாக அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, “தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றிக்கு வழிகாட்டும் என்பதற்கு விஜய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முதலமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் சூர்யா, “எனது நல்ல நண்பரும் முதலமைச்சருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மேற்கொள்ளும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையட்டும்” என வாழ்த்தியுள்ளார்.
கார்த்தி தனது வாழ்த்தில், “எனது உரிமையான சகோதரரான விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ளார். சினிமாவில் அவர் சாதித்தது போல அரசியலிலும் மிளிர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விஜய் முக்கியமானவர். கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட அவர், தனது பிறந்தநாளில் மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகை நித்யா மேனன், “விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகச்சிறந்த மனிதரும் கூட. நல்ல மனதுடன் தனது கொள்கைகளில் உறுதியாக இருந்து இந்த நிலையை அடைந்துள்ளார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்பா, “முதலமைச்சர் விஜய்க்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நினைக்கும் அனைத்து நல்ல காரியங்களும் வெற்றியடைய இறைவன் அருள் புரியட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால், “விஜய் உண்மையிலேயே சிறப்பான மனிதர். அனைவரிடமும் சமமாக பழகக்கூடியவர். அமைதியான குணமும் கடின உழைப்பும்தான் அவரது வெற்றியின் ரகசியம். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா, “விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முதலமைச்சராக அவர் ஆற்றும் பணிகள் மேலும் சிறக்கட்டும். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்று கூறியுள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே, “எனது அன்பு நண்பர் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இறைவன் அருளால் அவர் இன்னும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகின் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் வாழ்த்து பதிவுகள் குவிந்து வருகின்றன. ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், #HBDCMVijay என்ற ஹாஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

