தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள பரி சௌக் பகுதியில் இருந்து நொய்டா செக்டர் 63-க்கு செல்வதற்காக 16 வயது சிறுமி தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரும் நடத்துநரும் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 43 கிலோமீட்டர் தூரம் பேருந்து சென்ற நிலையில், வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமியை அவர்கள் இறக்கிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கான்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் குல்தீப் (39), நடத்துநர் சந்தீப் (26) ஆகிய இருவரையும் திமார்பூர் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பூமி பெட்னேகர், “மீண்டும் மீண்டும் இதே கொடூரம் நடப்பதை நாம் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்? வெட்கக்கேடு!” என தனது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியிலேயே இதுபோன்ற கொடூர சம்பவம் நடைபெற்றிருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து பயணித்த 43 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருந்த சோதனைச் சாவடிகள், தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

