தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், போயஸ் கார்டனில் அவர் வீடு வாங்கியதைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த தனுஷ், “விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பது நம்முடைய மனநிலையைப் பொறுத்தது. நான் அப்போது கேட்டேன் – ‘நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?’ என்று. அந்த ஒரு கேள்வி பலரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என தெரிவித்தார்.
மேலும் அவர் பகிர்ந்துகொண்ட ஒரு அனுபவமும் கவனம் பெற்றது. “சமீபத்தில் ஒரு ரசிகர் என்னுடன் செல்பி எடுத்தபோது, ‘உங்கள் அந்த பேச்சு என் மகனுக்கு மிகுந்த ஊக்கத்தை தந்தது. இப்போது அவன் முன்பைவிட மிகவும் உழைக்கிறான்’ என்று பெருமையாக சொன்னார்,” என கூறினார்.
அதனை தொடர்ந்து, “நம்முடைய பேச்சு ஒருவருக்கு ஊக்கமாக இருந்தால் அது நல்லது. இல்லையெனில் மீம்ஸ்களாக மாறினாலும் பரவாயில்லை. அதுவும் ஒரு பொழுதுபோக்கே. அது கூட நம் தொழிலின் ஒரு பகுதியே,” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
இறுதியாக மீண்டும் அதே கேள்வியை முன்வைத்த அவர், “அதனால் தான் மீண்டும் கேட்கிறேன் – ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?” என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.

