பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார். அவர் முதன்முறையாக கதை, திரைக்கதை எழுதி இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘துணிவு’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய எச். வினோத், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதனால் இந்த புதிய கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சினிமாவில் ஆரம்ப காலத்திலேயே இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த ராஜு, பல்வேறு நிகழ்ச்சிகளில் திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கவின் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
ராஜுவின் முதல் இயக்குநர் முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்த ‘ஜியோஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என புதிய பரிமாணத்தில் களமிறங்கும் ராஜு ஜெயமோகனின் இந்த முயற்சி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

