அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
கடந்த ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றது. இதையடுத்து, வரும் ஜூலை 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள ‘கான் சிட்டி’, “ஏமாற்றாதே… ஏமாறாதே!” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சமூகத்தில் நடைபெறும் பண மோசடிகள் மற்றும் குற்றச் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் மற்றும் காமெடி பாணியில் இப்படம் எடுத்துக்காட்டுகிறது.
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து நடித்துள்ளார்.
மாறுபட்ட நடிப்பு திறன் கொண்ட இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகியபோது கவனம் பெற்ற ‘கான் சிட்டி’, தற்போது நெட்ஃப்ளிக்ஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைய உள்ளது.

