Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

DroneMan Aravind, Who Has Worked on Over 300 Films, Honoured with National Drone Award

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அவர், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘இந்தியன் 2’, ‘LIK’, ‘வேட்டையன்’, ‘பைசன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படமான ‘ரணபாலி’ உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் ட்ரோன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது வான்வழி காட்சிகள் மூலம் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார்.

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதையின் தேவைக்கேற்ப உயர்தர வான்வழி காட்சிகளை உருவாக்குவதோடு, திரைப்படங்களுக்கான தரமான Stock Drone Footage-களையும் வழங்கி வருகிறார். இதன் மூலம் திரைப்பட உலகில் “ட்ரோன்மேன்” என்ற பெயரில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அரவிந்த் குமார், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள South Asian Media School-இன் Fellow-ஆகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் பெற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர வேண்டும் என்ற நோக்கில், ZOO Studios India நிறுவனத்தின் கீழ் DroneMan Academy-யை நிறுவினார். ட்ரோன் தொழில்நுட்பம் எதிர்காலத்தின் முக்கிய கருவி என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

2014 முதல் 2017 வரை அமெரிக்காவில் பல இந்திய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக பணியாற்றியபோது ட்ரோன் தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின்னர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அளித்த ஊக்கத்தின் பேரில், 2017-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறையில் ட்ரோன் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.

தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்ரோன் பயிற்சி முகாம்களை நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை வழங்கி வருகிறார். குறிப்பாக EDII MediaDrone உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய பயிற்சிகள் மூலம், ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஆராய்ச்சி மற்றும் புதுமை நோக்கி வழிநடத்தி வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற பலர் இன்று திரைப்படத் துறையிலும், ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்கள் தங்களது சொந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில், சென்னை வண்டலூரில் நவீன ட்ரோன் ஆய்வகத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். ட்ரோன் வடிவமைப்பு, நிரலாக்கம், சோதனை மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாடுகள் வரை அனைத்தையும் நேரடியாகக் கற்றுக்கொள்ளும் சூழலை இந்த ஆய்வகம் வழங்குகிறது. கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, மாணவர்களை வேலைவாய்ப்புக்குத் தயாரான திறமையாளர்களாக உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அவரது வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தேசிய அளவிலான முதல் NIDAR Drone 2025-26 போட்டியில் இரட்டை வெள்ளி விருதுகளை வென்று கவனம் ஈர்த்தனர். அந்த வெற்றியை தனிப்பட்ட சாதனையாக அல்லாமல், தமிழக இளைஞர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே அரவிந்த் குமார் கருதுகிறார். போட்டியில் கிடைத்த பரிசுத் தொகையையும் மீண்டும் DroneMan Academy ஆய்வக வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவு செய்திருப்பது, மாணவர்களின் எதிர்காலமே தனது மிகப்பெரிய முதலீடு என்பதை வெளிப்படுத்துகிறது.

சாதாரண ட்ரோன் கேமராமேனாக தொடங்கிய தனது பயணத்தை, இன்று திரைப்படத் துறைக்கும் தொழில்நுட்பக் கல்வித் துறைக்கும் திறமையான நிபுணர்களை உருவாக்கும் முன்னணி பயிற்சி மையமாக மாற்றியுள்ளார். திரைப்பட உலகிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையிலும் தனித்துவமான தடம் பதித்துள்ள எம். அரவிந்த் குமார், தனது அனுபவத்தை அடுத்த தலைமுறையின் வெற்றியாக மாற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டியாக திகழ்கிறார்.

அண்மையில் Drone Federation of India வழங்கிய தேசிய ட்ரோன் விருதை அவரது DroneMan Academy குழு பெற்றது. இந்த சாதனைக்கு தமிழ்நாடு அரசும் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், வரவிருக்கும் India’s NIDAR 2.0 தேசிய ட்ரோன் போட்டியில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10 அணிகளுக்கு தனது அகாடமி மூலம் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்.