பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்ட 31 வயதான பரத்காந்த், நடிகராகவும் நடனக் கலைஞராகவும் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், யூடியூப்பிலும் தனிப்பட்ட ரசிகர் வட்டாரத்தையும் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் தனது நண்பர் சாய் திரிலோக் உடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதி பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த பரத்காந்த் மற்றும் சாய் திரிலோக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tenant மற்றும் ‘கிராமம்’ உள்ளிட்ட குறும்படங்களில் நடித்துள்ள பரத்காந்த், தெலுங்கு திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவரது திடீர் மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

