தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், தனது மனைவி நர்மதாவுடன் நான்காம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி, தங்களது குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், மனைவிக்காக உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த மார்ச் 3-ம் தேதி இந்தத் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தங்களது நான்காம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ள நிலையில், ஹரிஷ் கல்யாணின் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது பதிவில், “அந்நியர்களாக இருந்து காதலில் விழுந்து, ஒருவரையொருவர் ஆழமாக நேசித்து, பெற்றோராகி அதற்கான பொறுப்புகளைக் கற்றுக்கொண்டது வரை எவ்வளவு அழகான பயணம் இது! எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறோம். ஒருவரின் வெற்றியை மற்றவர் கொண்டாடியும், இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக நின்றும் வந்திருக்கிறோம்.
ஒன்றாக வளர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்து அன்புடன் பயணிப்போம். நம் மகிழ்ச்சியான நான்காம் ஆண்டு, என் தங்கமே!” என மனைவி மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டீசல்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தாஷமக்கான்’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும், ‘நூறு கோடி வானவில்’ படத்திற்கான படப்பிடிப்புப் பணிகளையும் அவர் நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதியின் திருமண நாள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. இந்தத் தம்பதிக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram

