Tamilstar
Movie Reviews

டிரோன்ஸ் – திரை விமர்சனம்

Drones Movie Review

கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’.

கல்லூரியில் படிக்கும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே. தீபக் ஆகிய மூவரும் கல்லூரி நிர்வாகத்துக்குத் தெரியாமல் வெளியே சுற்றித் திரியும்போது காவல்துறையிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படும் அவர்கள், பெற்றோரிடம் உண்மையைச் சொல்லத் தயங்கி, ‘பிளாக் ஹோல்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் தஞ்சமடைகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் அவர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. உள்ளே சென்றவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது.

வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய டிரோன் கருவியைப் பயன்படுத்தும் மூவருக்கும் எதிர்பாராத ஆச்சரியம் காத்திருக்கிறது. அப்போது சித்தி இத்னானியைப் பார்க்கும் டிராவிட் செல்வம், முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறார். ஆனால், அவரது காதலுக்குத் தடையாக நிற்கிறார் சித்தி இத்னானியின் சூனியக்காரப் பாட்டியான தேவதர்ஷினி. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மூன்று மாணவர்களையும் சிறைப்பிடிக்கிறார்.

இதற்கிடையே காணாமல் போன மாணவர்களைத் தேடி வரும் காவல்துறை அதிகாரியும் சித்தி இத்னானியின் அழகில் மயங்குகிறார். இதனால் அவரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இவ்வாறு காதல், நகைச்சுவை, மர்மம் எனப் பல அம்சங்களுடன் கதை நகர்கிறது. சித்தி இத்னானியின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? தேவதர்ஷினியின் பிடியில் இருந்து மாணவர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு எப்படி?

அழகில் தேவதையாக மிளிரும் சித்தி இத்னானி, தனது தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்வதுடன், ஆக்ரோஷமான முகபாவனைகள் மூலமும் கவனம் ஈர்க்கிறார். அஞ்சலி நாயர் தனது அழுத்தமான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் வரும் டிராவிட் செல்வம், இயல்பான நடிப்பால் கலகலப்பைக் கூட்டுகிறார். அவரது காட்சிகள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.

சூனியக்காரப் பாட்டியாக வரும் தேவதர்ஷினி, இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது உடல்மொழியும் நடிப்பும் படத்துக்குக் கூடுதல் பலம். காவல்துறை அதிகாரியாக வரும் சினிமாவாலா சதீஷ், குரேஷி, ஆர்.ஜே. தீபக், சசி செல்வராஜ் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

தொழில்நுட்ப அம்சங்கள்!

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனின் கேமரா, கதையின் பின்னணிக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமாகப் பயணித்து ரசிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளன.

நகைச்சுவையை மையமாகக் கொண்டு, அறிவியல் பின்னணியையும் மர்மத்தையும் கலந்து ஒரு வித்தியாசமான படைப்பை வழங்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத். சில இடங்களில் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், நகைச்சுவைக் காட்சிகளும் புதுமையான கதைக்களமும் அந்தக் குறையை ஓரளவு மறக்கச் செய்கின்றன.

மொத்தத்தில்: அறிவியல் பின்னணியில் காதல், மர்மம், நகைச்சுவை ஆகியவற்றைக் கலந்து வழங்கியுள்ள ‘டிரோன்ஸ்’, வித்தியாசமான கதைக்களத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்குப் படமாக அமைகிறது.