Tamilstar
Movie Reviews

சண்டக்காரி திரைவிமர்சனம்

Sandakari movie Review

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் கறாராக இருக்கிறார். மறுபுறம், பல்வேறு லட்சியங்களுடன் இருக்கும் விமல், ஸ்ரேயாவிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேர்கிறார்.

ஆனால், அந்த வேலையில் நீடிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரேயாவிடம் வேலை பார்க்க முடியாமல் வெளியேறிய நிலையில், விமல் மட்டும் இந்த சவாலை சமாளித்தாரா? ஸ்ரேயாவின் மனதில் இடம்பிடித்தாரா? ஸ்ரேயா போடும் ஆட்டம் இறுதியில் எங்கு சென்று முடிகிறது? என்பதே ‘சண்டக்காரி’ படத்தின் மையக்கதை.

விமல் வழக்கம்போல் தனது இயல்பான மற்றும் ஜாலியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். குறிப்பாக அப்பாவியான அசிஸ்டென்ட்டாக வரும் காட்சிகளில் அவரது உடல்மொழியும் காமெடி டைமிங்கும் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்கிறார் நடிகை ஸ்ரேயா. மாயா கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் நடித்துள்ள அவர், தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஹீரோவைவிட கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக ஸ்ரேயா இருப்பதால், ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்ல முயற்சித்திருக்கிறார்.

லண்டன் பப்பில் இடம்பெறும் பாடலும், கிராமத்து பின்னணியில் விமலுடன் இணைந்து லுங்கி அணிந்து ஸ்ரேயா ஆடும் பாடலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

பிரபு, கே.ஆர். விஜயா, உமா பத்மநாபன், தேவ் கில் உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அதேநேரத்தில், கதாபாத்திரங்கள் அழுத்தமாகவும் வலுவாகவும் எழுதப்படாதது படத்திற்கு பின்னடைவாக அமைகிறது. இதனால் பல காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன.

அம்ரிஷ் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள், ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த குத்துப்பாடல்களின் நினைவுகளை மீண்டும் கிளறுகின்றன.

மொத்தத்தில், விமலின் ஜாலியான நடிப்பு, ஸ்ரேயாவின் ஸ்டைலான கதாபாத்திரம் என கவனம் ஈர்க்கும் ‘சண்டக்காரி’, திரைக்கதையில் இன்னும் அழுத்தம் இருந்திருந்தால் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

விமல் – ஜாலி… ஸ்ரேயா – ஸ்டைல்…