Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தந்தை விஜயைப் போலவே அமைதியாக… ஜேசன் சஞ்சயை புகழ்ந்த நடிகர் சூரி!

Actor Soori Praises Jason Sanjay

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சயின் JSK Media இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூரி, விக்ராந்த் உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சூரி, ஜேசன் சஞ்சய் குறித்து கூறியதாவது:

“தம்பி ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜயைப் போலவே மிகவும் அமைதியாகவும், தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவராகவும் இருக்கிறார். ‘சிக்மா’ படத்தின் கதையை சுமார் இரண்டரை மணி நேரம் எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் என்னிடம் முழுமையாக விவரித்தார். அவர் கதை சொன்ன விதம், விஜய் அண்ணாவுடன் பேசியது போலவும், அவருடன் இருந்தது போன்ற உணர்வையும் எனக்கு ஏற்படுத்தியது.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக வெற்றி பெற வேண்டும். தமிழ்குமரன் சாரிடம், ‘அவர் மிகவும் அழகாக இருக்கிறார், கதாநாயகனாக நடிக்க வேண்டும்’ என்று கூறினேன். ஆனால், ஜேசன் சஞ்சய் இயக்குநராகப் பணியாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், கதாநாயகனாக நடிக்குமாறு தான் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் தமிழ்குமரன் சார் என்னிடம் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்” என்றார்.