Tamilstar
Movie Reviews

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

Vishwanath and Sons Movie Review

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பரம்பரை பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்), ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்புகிறார். மகன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ராதிகாவுக்கு, 42 வயதாகியும் சூர்யா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது கவலையாக உள்ளது. குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தும் தாயின் ஆசையை நிறைவேற்ற, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சூர்யா.

இந்நிலையில், குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. Bone Marrow Transplant சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்க, குழந்தையின் தாயின் எலும்புதான் பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து வெளிநாடு செல்லும் சூர்யா, குழந்தையின் தாயான மமிதா பைஜூவை சந்தித்து, சூழ்நிலையை விளக்கி இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்.

குழந்தைக்காக இந்தியா வரும் மமிதாவுக்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது. அவரை விட்டு பிரிய மாட்டேன் எனக் கூறும் மமிதாவை, சூர்யா ஏற்க மறுக்கிறார். இறுதியில் சூர்யாவின் மனம் மாறியதா? இருவரின் காதல் கைகூடியதா? என்பதே மீதிக்கதை.

நடிப்பு: சூர்யாவுக்கு நடிப்பை சொல்லித் தர வேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பான அணுகுமுறை, மறைமுகமாக காதலை வெளிப்படுத்துவது, நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது அனுபவ நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

மமிதா பைஜூவும் சூர்யாவுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார். சுறுசுறுப்பான பெண்ணாக வரும் அவரது சேட்டைகளும், காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர்.

இயக்கம் & திரைக்கதை: 20 வயது வித்தியாசம் கொண்ட இருவரின் காதலை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் வெங்கி அட்லூரி. குழந்தை, தாய், குடும்ப உறவுகள் என பல உணர்வுகளை திரைக்கதைக்குள் கொண்டு வந்த விதம் சிறப்பு. குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் வேகத்தை கூட்டுகின்றன.

அதே நேரத்தில், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதால் சில காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது. கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகள் இன்னும் அழுத்தமாக கையாளப்பட்டிருக்கலாம். சண்டைக் காட்சிகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

தொழில்நுட்பம்: ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. சூர்யாவின் வீடு, மருத்துவமனை, திருமணக் காட்சிகள் என அனைத்து காட்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் ‘பட்டாம்பூச்சி’ மற்றும் அம்மாவுக்காக இடம்பெறும் பாடல் கவனம் ஈர்க்கின்றன. மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்:
• சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார்
• கதைக்களம்
• இடைவேளை காட்சி
• நகைச்சுவைக் காட்சிகள்
• ஒளிப்பதிவு

மைனஸ் பாயிண்ட்ஸ்:
• திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு
• சில இடங்களில் ஏற்படும் தொய்வு
• சண்டைக் காட்சிகள்

மொத்தத்தில்: சில குறைகள் இருந்தாலும், குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை குடும்பத்துடன் ஒருமுறை ரசித்துப் பார்க்கலாம்.