பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், 60 வயதிலும் தனது உடற்தகுதி மற்றும் இளமையான தோற்றத்தால் ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வயதான தோற்றத்தில் அவர் காணப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு மறுநாளே தனது கட்டுக்கோப்பான உடலமைப்பை வெளிப்படுத்திய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான சைலேந்திர சிங், நடிகர் தனது தோற்றத்தை பராமரிக்க மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “60 வயதிலும் சல்மான் கானின் தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம், அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சை தான். இது எளிதான சிகிச்சை அல்ல. தலையிலும் நெற்றிப் பகுதியிலும் பல ஊசிகள் செலுத்தப்படும். அதனை சல்மான் எந்தவித சிரமமும் காட்டாமல் தைரியமாக எதிர்கொள்வார்” என்றார்.
மேலும், “ஒரு முறை அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். தலையில் ஊசிகள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும், அமைதியாக சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மற்றொரு நாளில், உணவு மேசையில் அமர்ந்தபடி கண்ணாடி முன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரிடம் நேரடியாக பேச முடியாததால், கண்ணாடி வழியாகவே உரையாடினேன். இவ்வளவு வலி இருந்தபோதும், அனைவருடனும் வழக்கம்போல் கலகலப்பாக பேசி, விருந்தோம்பலிலும் ஈடுபட்டார்” என சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இளமையான தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ள உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவுமுறை மட்டுமல்லாமல், தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் சல்மான் கான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவரது நண்பர் பகிர்ந்துள்ள தகவல் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

