94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வழக்கமான வசனங்களுக்குப் பதிலாக, பாடல்கள் மற்றும் மெல்லிசைகள் மூலமாகவே கதாபாத்திரங்கள் தொடர்பு கொள்ளும் வித்தியாசமான முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முழு திரைக்கதையையும் இசை வடிவமாக மாற்றி, ஒவ்வொரு வசனத்தையும் இனிமையான பாடல் வரிகளாக வடிவமைத்ததாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடித்துள்ள புதுமுக கலைஞர்கள் தங்களது வசனங்களைத் தாங்களே பாடுவதற்காக சிறப்பு இசைப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இயக்குநர் ஸ்ரீனிவாச ராவுடன் தன்னுடைய நீண்டகால நட்பை நினைவுகூர்ந்தார்.
அப்போது பேசிய அவர், “ஒரு திரைப்படம் உருவாக்குவது குறித்து எங்கள் முதல் சந்திப்பு ஒரு இரவு விருந்தில் நடந்தது. அப்போது அவர் எனக்கு இரண்டு கதைகளைச் சொன்னார். அதில் ஒன்று ‘அத்வைதம்’, மற்றொன்று ‘சிங் கீதம்’. இந்தக் கதையை நான் முதன்முதலில் 20 வயதில் கேட்டேன். இன்று 71 வயதில் அது திரைப்படமாக உருவாகி வெளியாக இருப்பதைப் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.
மேலும், தங்களது புகழ்பெற்ற ‘புஷ்பக விமானா’ திரைப்பட அனுபவத்தைப் பகிர்ந்த கமல்ஹாசன், “வசனங்கள் இல்லாத திரைப்படம் என்பதாலும், மிக இனிமையான சூழலில் பணியாற்றியதாலும் அந்த படப்பிடிப்பை முழுமையாக ரசித்தேன். வெறும் ரூ.15 லட்சம் செலவில் உருவான அந்த படம், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்படுத்திய தாக்கத்தை கணக்கில் கொண்டால், இன்றைய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியிருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வித்தியாசமான கதை சொல்லல் முறையால் கவனம் ஈர்த்துள்ள ‘சிங் கீதம்’, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

