Tamilstar
Movie Reviews

அதிரடி திரை விமர்சனம்

Athiradi Movie Review

தனது அண்ணன் படித்த அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்க சேரும் பசில் ஜோசப், அங்கே பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துயர சம்பவத்தின் நினைவுகளை எதிர்கொள்கிறார். அந்த கல்லூரியில் நடந்த கலை விழா தள்ளுமுள்ளுவில், அவரது அண்ணனின் காதலியான தர்ஷனா ராஜேந்திரன் உட்பட மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, கல்லூரியில் எந்த கலை நிகழ்ச்சியும் நடத்தப்படாமல் நிற்கிறது.

அண்ணனின் ஆசையையும் நினைவையும் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மேலும் தனது சக மாணவியான ரியா ஷிபுவின் முன்னால் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற முயற்சியிலும், பல ஆண்டுகளாக நின்று போன கல்லூரி கலை விழாவை மீண்டும் நடத்த முடிவு செய்கிறார் பசில் ஜோசப். கடும் முயற்சிக்குப் பிறகு நிர்வாகத்தின் அனுமதியையும் பெற்று, சிறப்பு விருந்தினராக வினீத் ஸ்ரீனிவாசனை அழைக்க திட்டமிடுகிறார்.

அதே நேரத்தில், ஒருகாலத்தில் அந்தப் பகுதியையே அதிரவைத்த ரவுடியான டொவினோ தாமஸ், தற்போது தனது வாழ்க்கையை மாற்றி பாடகராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். தனது அம்மா கற்றுக்கொடுத்த பாடலை பெரிய மேடையில் பாட வேண்டும் என்பதற்காக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்.

இந்த சூழலில், பசில் ஜோசப் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கும், டொவினோ தாமஸ் தரப்புக்கும் எதிர்பாராத மோதல் உருவாகிறது. இறுதியில் கல்லூரி கலை விழா நடந்ததா? டொவினோ தாமஸின் இசை நிகழ்ச்சி வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்துள்ள பசில் ஜோசப் வழக்கம்போல மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். வெளியில் சாதாரண மாணவனாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் தனது இலக்கை அடைய போராடும் இளைஞனின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் காட்டும் அவசரமும், வினீத் ஸ்ரீனிவாசனை மேடைக்கு கொண்டு வர முயற்சிக்கும் தருணங்களும் ரசிகர்களை ஈர்க்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் டொவினோ தாமஸ். ஆரம்பத்தில் அமைதியான பாடகராக தோன்றும் அவரது கதாபாத்திரம், முன்னாள் ரவுடி என்ற உண்மை வெளிப்படும் தருணத்தில் மாஸ் ஆக மாறுகிறது. அதன் பிறகு அவர் காட்டும் உடல் மொழி, நகைச்சுவை, வசன உச்சரிப்பு அனைத்தும் திரையை முழுவதும் ஆக்கிரமிக்கிறது.

இவர்கள் இருவருக்கும் நடுவில் சிக்கிக்கொள்ளும் வினீத் ஸ்ரீனிவாசன் பல இடங்களில் கலகலப்பை கூட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் டொவினோ தாமஸை சமாளிக்க அவர் பயன்படுத்தும் யுக்தி ரசிகர்களிடம் கைதட்டலை பெறுகிறது.

ரியா ஷிபுவுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லையென்றாலும், கதாநாயகனுக்கு ஊக்கமளிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தர்ஷனா ராஜேந்திரன் குறுகிய நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். பசிலின் அண்ணனாக வரும் விஷ்ணு அகஸ்தியா எமோஷனல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

‘மின்னல் முரளி’ படத்தில் பணியாற்றிய அருண் அனிருத்தன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமென்றாலும், கல்லூரி விழாவையும் முன்னாள் ரவுடியின் இசை கனவையும் இணைத்து வித்தியாசமான திரைக்கதையாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பாதியில் சில வழக்கமான கல்லூரி காட்சிகள் இருந்தாலும், இடைவேளைக்கு பிறகு படம் எடுக்கும் வேகம் அதனை மறக்க வைக்கிறது. சாமுவேல் ஹென்றியின் ஒளிப்பதிவு கல்லூரி கொண்டாட்டங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது. விஷ்ணு விஜயின் இசையும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.