நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னையை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா மற்றும் இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், சிம்பு இளமை மற்றும் முதுமை என இரு விதமான தோற்றங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இரவு நேர காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா மோகன் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தீபாவளி சிம்பு ரசிகர்களுக்கு சிறப்பு கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

