ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து, படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் காலை 9 மணி முதல் காட்சிக்காக முன்பதிவு செய்து, பேனர்கள் மற்றும் கொண்டாட்ட ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தனர்.
ஆனால், திட்டமிட்டபடி நேற்று வெளியாக வேண்டிய ‘கருப்பு’ படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த திடீர் மாற்றம் ரசிகர்களையும் படக்குழுவினரையும் கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்கலங்கிய நிலையில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும், படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து நடிகர்கள் தனுஷ், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘கருப்பு’ திரைப்படம் இன்று காலை 9 மணி காட்சியுடன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, நடிகை திரிஷா, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கிற்கு நேரில் சென்று ரசிகர்களுடன் இணைந்து படத்தை கண்டுகளித்தனர்.
அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். படம் முடிந்த பிறகும் ரசிகர்களை நேரில் சந்தித்த படக்குழுவினர், அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

