Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கையில் வழங்கப்பட்ட சான்றிதழ்… நினைத்ததை செய்துமுடித்த பார்த்திபன்..!

R. Parthiban breaks silence on ‘No Caste, No Religion’ certificate

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர். சமூக பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதில் துணிவான இவர், சமீபத்தில் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் சாதி குறித்து அவர் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தன்னை எந்த சாதி, மதத்திற்கும் உட்பட்டவர் அல்ல என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பார்த்திபன் முனைந்தார்.

இதற்காக, “சாதி – மதமற்றவர்” என சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்பதாக சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அளித்த அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், நீதிமன்றத்தை நாடினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, ஒரு வாரத்திற்குள் அவருக்கு “சாதி, மதம் அற்றவர்” என்ற சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 27-ம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் பார்த்திபனுக்கு, அவர் எந்த சாதி, மதத்தையும் சாராதவர் என அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கினார். இதன் மூலம், சட்டபூர்வமாக தனது சாதி, மத அடையாளங்களை பார்த்திபன் துறந்துள்ளார்.

இவ்வழக்கு இன்று (ஏப்ரல் 29) மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.