விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது தெரிந்ததே.
இப்படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை ஜனநாயகன் படக்குழு அணுகி உள்ளது. இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்பப் பெற உள்ளதாக கூறி, பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், வழக்கு தனி நீதிபதி முன்பு, வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில், பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.
வழக்கு, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார். வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, தற்போது ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, மறு ஆய்வுக்குழு புதிதாக அமைக்கப்பட்டு படத்தை பார்ப்பார்கள்.
மறு ஆய்வுக்குழு 20 நாட்களில் படத்தை பார்த்து ஆலோசித்து திருத்தங்களை சொன்னபின் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. சான்று கிடைக்கும் பட்சத்தில் மார்ச் முதல் வாரத்தில் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகலாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


