ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டார். இந்த தகவல் கூட இணையத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ உடன் வைரலானது.
அதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார். இருந்தாலும், வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய் மகனான ஜேசன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாரிசு படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதனை அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.
Don't Share any leaked pics and videos from #Varisu
— Sanjay Vijay (@IamJasonSanjay) August 22, 2022

