‘கே.ஜி.எஃப்’ வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups’ திரைப்படத்தின் இரண்டாவது காதல் பாடலான ‘தடுமாறுதே’ லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ஏற்கனவே வெளியான ‘தபாகி’ பாடலைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘தடுமாறுதே’ பாடல், யஷ் மற்றும் தாரா சுதாரியா இடையேயான காதல் தருணங்களையும், இருவரின் திரைக் கெமிஸ்ட்ரியையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி, ஃபஹீம் அப்துல்லா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்தப் பாடலை, தமிழில் சித்தார்த் பஸ்ரூர் பாடியுள்ளார். பாடலின் தமிழ் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். “பெரும் புயலும் என்னை தீண்டாதே… புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே…” என்று தொடங்கும் காதல் வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
பாடல் வீடியோவில் ‘ராயா’ கதாபாத்திரத்தில் யஷ், ‘ரெபெக்கா’ கதாபாத்திரத்தில் தாரா சுதாரியா ஆகியோரின் காதல் காட்சிகளுடன், நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் முக்கிய தோற்றங்களும் இடம்பெற்றுள்ளன.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் யஷ், தாரா சுதாரியா, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ள ‘டாக்ஸிக்’, ஆகஸ்ட் 26, 2026 அன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

