காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
65 கிலோ எடைப்பிரிவில் அபாரமாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியைச் சந்தித்த சிம்ரன், அவருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழக இளைஞர்கள் தொடர்ந்து சாதித்து வருவது நாட்டிற்கே பெருமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராஜா முத்துபாண்டி, பல்வேறு பொருளாதார மற்றும் குடும்பச் சவால்களை கடந்து இந்த உயரத்தை எட்டியுள்ளார். 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட முழங்கை காயம் காரணமாக விளையாட்டில் இருந்து விலக நினைத்த அவர், கடினமான பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் மீண்டும் களத்திற்கு திரும்பினார்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவும் என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ராஜா முத்துபாண்டியின் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், “இது ஒரு தொடக்கம் மட்டுமே. எதிர்காலத்தில் ஒலிம்பிக் உள்ளிட்ட உலகளாவிய போட்டிகளில் மேலும் பல தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என வாழ்த்தியுள்ளார்.
ராஜா முத்துபாண்டியை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விளையாட்டு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

