Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay Opens Up About His Mother

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், எனது சகோதரியைப் பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். நான் ஒருநாள் அவருக்கு ஃபோன் செய்ய மறந்துவிட்டால், அவரே அழைத்து ‘இன்று என்ன நடந்தது? எப்படி இருக்கிறாய்?’ எனக் கேட்டுக்கொண்டிருப்பார்” என்றார்.

மேலும், தனது பெற்றோரிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள தனக்கு தயக்கம் இருப்பதாகக் கூறிய ஜேசன் சஞ்சய், “எனது சகோதரியிடம் மட்டும் என்னுடைய அனைத்து விஷயங்களையும் மனம் திறந்து பேசுவேன்” என்றார்.

சென்னையில் தனக்கு மிகவும் பிடித்த விஷயம் குறித்து பேசிய அவர், நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்றும், பிரியாணி மற்றும் பரோட்டா தனக்கு பிடித்த உணவுகள் என்றும் தெரிவித்தார்.

தனக்குத் தெரிந்த மொழிகள் குறித்து கூறிய அவர், ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசத் தெரியும் என்றும், தனது தாய் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் ஈழத் தமிழையும் பேச முடியும் என்றும் தெரிவித்தார். இந்தி தனக்கு தெரியாது என்றும், தெலுங்கு ஓரளவு புரியும் என்றும் கூறினார்.

தனது திரையுலகப் பயணம் குறித்த விமர்சனங்கள் குறித்தும் பேசிய ஜேசன் சஞ்சய், “ஒருபுறம் எனக்கு நிறைய அன்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் இயல்பாகவே என் மீது பல எதிர்பார்ப்புகளும் உள்ளன. எனவே, நான் நேர்மறையான கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். திரையுலகிற்குள் நுழைவது எனக்கு எளிதாக இருந்தது போன்ற எதிர்மறையான கருத்துகளைப் பற்றி கவலைப்பட மாட்டேன்” என்றார்.

மேலும், “மக்கள் ஒரு படத்தைப் பார்க்கும்போது அந்தப் படத்தை மட்டுமே பார்ப்பார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதைப் பற்றி அவர்கள் பேசப்போவதில்லை” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.