பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார். மேலும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், உளவுத்துறை பின்னணியிலான கதையை மிகவும் யதார்த்தமாகவும் அழகியலுடனும் காட்சிப்படுத்தியுள்ளதாக பாராட்டினார்.
இயக்குநர் பி.எஸ். மித்ரனை சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என புகழ்ந்த சூர்யா, அவரிடம் ஏராளமான கதைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கார்த்தி குறித்து பேசிய அவர், “ஒரு நடிகரை விட அவர் நடித்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்படுகிறது என்றால், அது அந்த நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். கார்த்தி சர்தாராக திரையில் தோன்றியதிலிருந்து, ரசிகர்கள் அவரை சர்தாராகவே பார்க்கிறார்கள். இன்றும் அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பது கார்த்திக்கு கிடைத்த ஆசியாகவே பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்க்கைப் பின்னணியை மையமாகக் கொண்டு ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘சர்தார் 2’, செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

