Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்காதீர்கள்! பெற்றோருக்கு மம்மூட்டி எச்சரிக்கை

Mammootty Warns Parents Against Giving Smartphones to Children

கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் விளம்பரத் தூதராகவும், ‘சைபர் செக்யூரிட்டி கேப்டனாகவும்’ மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

‘கிளிக் – இணையக் குற்றங்களுக்கு எதிரான சமூகத்தின் கூட்டு முயற்சி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இணையவழிக் குற்றங்கள் நடைபெற்ற பிறகு விசாரணை நடத்துவதைவிட, அவை நிகழாமல் முன்கூட்டியே தடுப்பதே முக்கியம் என வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு கேரளாவில் இணையவழி மோசடிகள் தொடர்பாக 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், 2027-ஆம் ஆண்டுக்குள் இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வலிமையான மாநிலமாக கேரளாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மம்மூட்டி, இணையக் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் போராட்டத்தில் இளைஞர்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்குப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பேசிய அவர், “குழந்தைகள் அழும்போதோ அல்லது குறும்பு செய்யும்போதோ அவர்களை அமைதிப்படுத்துவதற்காக ஸ்மார்ட்போன்களைக் கொடுப்பது நல்ல பழக்கமல்ல. மொபைல் போன்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் முதிர்ச்சியடையும் வரை பட்டன் போன்களை வழங்குவதே சிறந்தது” என அறிவுறுத்தினார்.

மேலும், இணையக் குற்றங்களைக் கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ளும் திறனைச் சமூகத்தினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முக்கிய முன்னெடுப்பாக ‘கிளிக்’ திட்டம் அமையும் என்றும் மம்மூட்டி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு ‘கிளிக் கேப்டன்’ தொப்பிகளை மம்மூட்டி வழங்கினார்.