Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சிம்பு – நயன்தாரா?

Simbu and Nayanthara to Reunite After 10 Years

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நட்சத்திரப் பட்டாளத்துடன் பிரம்மாண்டமான பக்திப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது எனக் கூறப்படும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ‘தி வேர்ல்ட் ஆஃப் அரசன்’ என்ற பெயரில் 7 நிமிட முன்னோட்டக் காட்சிகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், சிம்பு மற்றும் நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘டூட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கீர்த்தீஸ்வரன், தனது இரண்டாவது படத்தில் சிம்புவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சிம்பு காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தக் கூட்டணி உறுதியானால், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து சிம்பு – நயன்தாரா மீண்டும் இணையும் படமாக இது அமையும். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அதேபோல், ‘ஒஸ்தி’ படத்திற்குப் பிறகு சிம்பு காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படமாகவும் இது அமைய வாய்ப்புள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், சிம்பு, நயன்தாரா மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.