தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படத்தில் இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சினிமாவில் நுழைந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கவுரி கிஷன் மனம் திறந்து பேசியுள்ளார். நடிகையானதால் கிடைத்த புகழையும், அதனால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கட்டுப்பாடுகளையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “‘96’ படத்தில் வரும் ஜானுவை விரும்பும் பலரும் என்னிடம் மிகுந்த அன்புடன் பேசுகிறார்கள். இதை என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். நான் ஒருநாள் நடிகையாவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. புகழுக்காகவும் ஆசைப்பட்டதில்லை.
ஆனால், நடிகையான பிறகு எனது தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டது. நண்பர்களுடன் வெளியே சென்று ஜாலியாகப் பானிபூரி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், முன்புபோல் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை. நிஜ வாழ்க்கையில் நான் மிகவும் அமைதியானவள். நண்பர்களுடன் நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புகிறேன்” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
கவுரி கிஷனின் இந்தப் பேச்சு, புகழும் அங்கீகாரமும் கிடைத்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

