நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இப்படம், வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. உலகளவில் ஆறு நாட்களில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கனடாவில் இப்படத்தின் திரையிடல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் படத்தை விநியோகம் செய்து வரும் ‘யோர்க் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 21-ஆம் தேதி முதல் தங்களது திரையரங்குகளில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. திரையரங்க நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில தவிர்க்க முடியாத சூழல்களே இதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துள்ளது.
மேலும், திரையரங்கம் தரப்பில் நிதி மற்றும் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முறையாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வட அமெரிக்க விநியோகஸ்தர்களான ‘ஸ்லோகா என்டர்டெயின்மெண்ட்ஸ்’ மற்றும் ‘பிரத்யங்கிரா சினிமாஸ்’ நிறுவனங்களிடமிருந்து படத்தைத் தொடர்ந்து திரையிடுவதற்குத் தேவையான கேடிஎம் (KDM) எனப்படும் டிஜிட்டல் அனுமதிக் குறியீடுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிய ஒப்புதல் கிடைக்காததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகளவில் வசூல் சாதனைகளைப் படைத்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கனடாவில் திடீரெனத் திரையிடப்படாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும், மீண்டும் எப்போது திரையிடல் தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

