பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலை காலமானதாக வெளியான செய்தி, திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இனிமையான இசையாலும், மறக்க முடியாத பாடல்களாலும் தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த தேவாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவாவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “மிகவும் துயரமான செய்தி. நம்பவே முடியவில்லை. வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அனைவரையும் வாழ்த்திக்கொண்டு எங்களுடன் இருந்த ஒருவர், இன்று நம்மிடையே இல்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட தேவா, தேனைப் போன்ற இனிமையான குணமும், தென்றலைப் போன்ற கலகலப்பான இயல்பும் கொண்டவர் என்றும், இசை மற்றும் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்றும் தெரிவித்துள்ளார். “மிகவும் சீக்கிரமாகவே நம்மை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள். ஏன் இப்படி? தேவா சார், உங்களை நாங்கள் மிகவும் இழக்கிறோம். உங்கள் ஆன்மா அமைதியடையட்டும்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஒருவர், “எதற்கு இவ்வளவு அவசரம் சார்? தேனிசைத் தென்றல் இயற்கை எய்தினார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

