ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், முக்கிய பிரமுகர்கள் போல் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நேர்மையற்ற நபர்களின் செயல்கள் எந்த அளவுக்கு செல்லக்கூடும் என்பதை ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பண பலத்தைக் கண்டு அஞ்சாமல் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கருணையற்ற வகையில் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில் சட்டம் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு குழந்தையின் வலியைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது; அவரது குரலை அடக்கிவிடவும் முடியாது; நீதியை ஒருபோதும் பேரம் பேசித் தீர்மானிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவரை மவுனமாக்கவோ அல்லது நீதியைத் தடுக்கவோ செல்வாக்கு, அரசியல் தொடர்புகள் அல்லது பணம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
“குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க வழியே இருக்கக்கூடாது. சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதுடன், முன்னதாக விசாரணையில் ஈடுபட்ட சில காவல்துறை அதிகாரிகளுக்கும் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

