ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் கருணாஸ். இந்நிலையில், ஒருநாள் கடலில் சில்லறைக் காசுகளை தேடும்போது அவரது கையில் விலை உயர்ந்த ஆபரணம் ஒன்று கிடைக்கிறது.
கிடைத்த ஆபரணத்தை நேர்மையுடன் போலீசில் ஒப்படைக்கிறார் கருணாஸ். ஆனால், அந்த ஒரு சம்பவமே அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. செய்யாத தவறுக்காக குற்றவாளியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்படும் அவர், அதன்பிறகு எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதும்தான் படத்தின் மீதிக்கதை.
சாதாரண மனிதனின் நேர்மை, மானம், உண்மை ஆகியவற்றுக்கு இந்த சமூகத்தில் என்ன விலை இருக்கிறது என்பதை அழுத்தமாக கேள்வி எழுப்புகிறது ‘என்ன விலை’. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கும் ஒரு நிரபராதியின் வலியையும், உணர்வுகளையும் கதாபாத்திரங்களின் வழியே உயிரோட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர்.
தனது குடும்பம் மற்றும் வாழ்க்கை என அமைதியாக வாழ்ந்து வரும் சாதாரண மனிதன், திடீரென குற்றவாளியாக நிற்கும் சூழ்நிலையை கருணாஸ் மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். உடல்மொழி, வசன உச்சரிப்பு என அவரது நடிப்பு கதாபாத்திரத்தின் வலியை பார்வையாளர்களிடம் கடத்துகிறது. இதுவரை பார்த்திராத மாறுபட்ட பரிமாணத்தை தனது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தின் மற்றொரு முக்கிய பலம் நிமிஷா சஜயன். வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் கருணாஸுக்காக வாதாடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். ஒரு தனி மனிதனின் வாழ்க்கைக்காக சட்டத்தின் வழியே அவர் நியாயம் கேட்கும் காட்சிகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன.
விஜயலட்சுமி வீரமணி, ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கமலேஷ் ஜெகன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோரின் நடிப்பும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கும், கடல் பின்னணியில் இடம்பெறும் காட்சிகளுக்கும் சாம் சி.எஸ். இசை சிறப்பாகப் பொருந்தியுள்ளது. ராமேஸ்வரத்தின் இயற்கை மற்றும் அப்பகுதியின் வாழ்வியலை கதைக்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆல்பா ஆண்டனி.
மொத்தத்தில், ஒரு சாதாரண மனிதனின் உண்மைக்கும் நேர்மைக்கும் என்ன விலை? என்ற கேள்வியை அழுத்தமாக முன்வைக்கும் யதார்த்தமான படைப்பாக அமைந்துள்ளது ‘என்ன விலை’.


