முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், விஜய் – திரிஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருப்பாச்சி’யின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் 1-ம் தேதி ‘திருப்பாச்சி’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விநியோகஸ்தர்களான திருப்பதி ஃபிலிம்ஸ் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கும், புதிய திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக விநியோகஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் ‘சிக்மா’ மோதுவதைத் தவிர்க்கும் வகையில், அதன் வெளியீடும் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பேரரசுவின் அறிமுகப் படமாக 2005-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘திருப்பாச்சி’, விஜய் – திரிஷா நடிப்பில் உருவான ஆக்ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் பின்னர் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதற்கிடையே, வெளிநாடுகளில் திட்டமிட்டபடி அக்டோபர் 2-ம் தேதி ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இப்படத்தின் புதிய ரீ-ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சிக்மா’ வெளியாகும் நேரத்தில் ‘திருப்பாச்சி’யும் வெளியானால் அப்பா – மகன் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வரும் சூழல் உருவாகும் என்பதால், தமிழகத்தில் ரீ-ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அக்டோபர் 1-ம் தேதி ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’, விஜய் சேதுபதி – லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மேலும், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகிறது.

